
நமக்கென்று ஒரு வீடு இருப்பது எவ்வளவு அவசியம்-அத்தியாவசியமாகி விட்டதோ, அதேபோல இணையவெளியில் நமக்கென்று ஒரு 'வெப்சைட்' இருப்பதும் கூட அவசர அவசியமாகி வருகிறது.
முன்பு இன்டர்நெட் என்பது ஒரு தகவல் தொடர்புக்கான விஷயமாக இருந்து வந்தது. ஆனால் இன்று அது ஒரு மீடியம் என்ற அளவுக்கு வளர்ந்து விட்டது.
ஒவ்வொருவரின் தனி வாழ்க்கையிலும் இன்டர்நெட் இன்று முக்கியப் பங்கு வகிக்கிறது. டீ சாப்பிடுவது, காப்பி சாப்பிடுவது போல என கேஷுவலாக இருந்து வந்த இன்டர்நெட் இன்று சாப்பாட்டுக்கு இணையான முக்கியத்துவத்துடன் வளர்ந்து நிற்கிறது.
தனிப்பட்ட, சமூக, அரசியல், பொருளாதார, கற்பனைத் திறன் என பல நிலைகளிலும் இன்று இன்டர்நெட் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய அம்சம்.
அனைவரையும் உள்ளடக்கக் கூடிய ஒரே மீடியம் இணையதளம் மட்டுமே.
ஒவ்வொருவரும் இன்று 'வெப்சைட்'களை உருவாக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர். முன்பு 'இமெயில் ஐடி' மட்டும் இருந்தால் கெளரவமாக கருதப்பட்டது. இப்போது நமது இணையதளத்தின் பெயரையும் 'விசிட்டிங் கார்டில்' சேர்ப்பது கூடுதல் கெளரவமாக மாறியுள்ளது.
எப்படி ஒரு இமெயில் ஐடியை உருவாக்குவது சுலபமோ, அதேபோல இன்று வெப்செட்டை உருவாக்குவதும் கூட மிக எளிதாகியுள்ளது.